Monday, April 30, 2012

ஆண் மலடு


இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!


இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Monday, April 23, 2012

கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு



`கொழுப்பு' என்றாலே பயப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி- `கொழுப்புச் செல்களில் உள்ள ஒரு மரபணு, சர்க்கரை நோயில் இருந்து காக்கிறது' என்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், பொதுவான கருத்துக்கு மாறாக, உடம்புக் கொழுப்பானது நன்மையே செய்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடம்பின் திறனை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்கள் கூறும் chREBP மரபணு, குளூக்கோஸ் சர்க்கரையை `பேட்டி ஆசிட்களாக' மாற்றுவதன் மூலமும், இன்சுலினுக்கான நுண்ணுணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் `டைப் 2' சர்க்கரை நோயை எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வயதில் உடல் பருமன் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பொதுவாக `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
``எல்லா கொழுப்பும் தீமையானது என்ற பொதுவான கருத்து உண்மையல்ல. உடல் பருமன் என்பது மோசமான உடலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதுதான் ஒருவருக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், குண்டான பலருக்கு உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன'' என்று ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் மார்க் ஹெர்மான் கூறுகிறார்.
உடல் பருமனானவர்களைப் பொறுத்தவரை, சர்க்கரையானது கொழுப்பு செல்களில் நுழைவது தடுக்கப்படுவதால் அதன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் ஆய்வகத்தில், குண்டான எலி ஒன்றில் குளூக்கோஸை கடத்தும் ஜீன் அளவை அதிகரித்தபோது, அதன் மூலம் மேலும் அதிக சர்க்கரை கொழுப்புச் செல்களில் அனுமதிக்கப்படுவதும், அதன்மூலம் சர்க்கரை நோயிலிருந்து எலி காக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. குளூக்கோஸை கடத்தும் ஜீன்கள் இல்லாத சாதாரண எடையுள்ள எலிகளில் நாளடைவில் சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று உற்சாகமடைந்துள்ள ஆய்வாளர்கள், மேலும் இதுதொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Friday, April 20, 2012


இந்திய மருத்துவம்:



மேற்குலகம் உலகின் முதல் மருத்துவராக ஹிப்போக்கிரட்டஸைக் (460 - 377 BC) குறிப்பிடுகிறது. ஆனால் இவருக்கு முன்பே மகரிஷி சாரகா (500 BC) எழுதிய சாரகா சம்ஹிதா அல்லது எளிய தமிழில் மருத்துவக் கையேடு புகழ்பெற்றது. நூலில் பல்வேறு வியாதிகளுக்கான தீர்வுகள் காணப்பட்டது. மருத்துவ முறைகள், முதலுதவிகள் குறித்த தெளிவான கையேடு. நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மருத்துவர் சாரகா ரோம, அரபு நாடுகளில் மிகவும் மதிக்கப்பட்டார்.

அடுத்தது ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம்! கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்பே சுஷ்ருதர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! சிதைந்த மூக்கு, உதடு,காதுகள் இவற்றைத் தனது அறுவைசிகிச்சைத் திறனால் சரிசெய்திருக்கிறார். அறுவை சிகிச்சையை 8 வகைகளாகப் பிரிக்கிறார். 125 வகையான மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.