Sunday, June 26, 2011

புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?



பிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்
கழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.
இதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர் அதுபற்றி முடிவு எடுங்கள்.

Friday, June 24, 2011

முதுமையில் தாம்பத்யம்


Sex
வயதான பிறகும் அன்பான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்டநாட்கள் உயிர் வாழ்வதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் உயிர் வாழலாம்
டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.
நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.
வயது ஒரு தடையல்ல
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.
மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கம்
பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது.
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.
எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

Thursday, June 23, 2011

குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?



முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே, நிறைமாத குழந்தைகள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன.
பிறந்த குழந்தையின் எடை, 2.5 கிலோ கிராம் இருந்தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும், குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன. ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும், இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் கிராமிற்கு குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க, இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளை பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
இந்தக் கருவிகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
தாய்ப்பால் கொடுப்பது எப்போது: பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த, குழந்தை முழு தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தாய்ப்பாலில், குழந்தைக்கு தேவையான புரதம், நீர்ச்சத்து, தாதுப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு, எட்டு முதல் 10 முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என, ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்து குடிப்பதால், வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால், உணவு பாதையில் இருந்து, மீண்டும் வாய் வழியாக திரும்புவதாலும், வாந்தி ஏற்படுகிறது. இதனால், பயப்பட தேவையில்லை. குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், மருத்துவரை அணுகி, உணவு பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள், பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மலம் கழிக்கும். இவை அனைத்தும், இயற்கையான செயலே. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை எனில், மருத்துவரின் அறிவுரைப்படி, தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சிகிச்சை தர வேண்டும்.

Monday, June 20, 2011

மாமரம்

மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது.  சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர்.  அதுபோல் முக்கனியில் முதல் கனியும் மாங்கனிதான்.
மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான்.  குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும்.
மாமரத்தை, ஆமிரம், எகின், சிஞ்சம், சூதம், குதிரை, மாழை, மாந்தி என பல பெயர்களில் சித்தர்கள் அழைக்கின்றனர்.  மா, பெருமர வகையைச் சார்ந்தது.  இதில் பல வகைகள் உள்ளன.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில்  கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  மா இலை ஒரு கிருமி நாசினியாகும்.    வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.  இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து  தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
மாவின் கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூ
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
மாம்பிஞ்சு
இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும்.  வாந்தி, குமட்டல் நீங்கும்.
மாங்காய்
மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.  அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.   மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.
மாம்பழம்
கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது.
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
வேத சத்திய மாக விளம்புவோந்
தாது விர்த்திருக்குந் தம்பன மாங்கனி
போதம் மர்த்தனம் புன்காயி னால்வடு
வாத பித்த கபங்களை மாற்றுமே
(அகத்தியர் குணவாகடம்)
மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.  இதனை  கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.
மாங்கொட்டை
பேசுமே சீதப் பெருக்குஞ்சோ ரிக்கடுப்பும்
வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு - மாசுடைய
பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் காணில் வாது
-அகத்தியர் குணவாகடம்
மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.
மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
மாம்பிசின்
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
அளவில்லாப் பயன்களை அள்ளித்தரும் மாமரத்தை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Tuesday, June 14, 2011

புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்!


புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி பலப்பல கேள்விகள் பத்தி நம்மில் பலருக்கு அக்கரையோ, ஆர்வமோ கிடையாது. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிகளையும் எடுப்பதில்லை!
ஆனா, ஒருத்தருக்கு புற்றுநோய் வந்திருச்சி அப்படீன்னு யாராவது சொல்லிட்டா போதும், அங்கே முதல் ஆளா போய் நின்னு, என்னது அவருக்கு புற்றுநோயா? அப்படீன்னு ஒரு பேரதிர்ச்சியை முகத்துலயும் வார்த்தைகள்லேயும் வெளிப்படுத்தி,
"அடப் பாவமே.....! அவர் என்ன பாவம் பண்ணினாரோ தெரியலை. அவருக்கு புற்றுநோய் வந்திடுச்சி. புற்றுநோய்க்கு இதுவரைக்கும்/இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல (?). இனி என்ன செய்ய, அவரு இருக்கப்போறது 6 மாசமோ ஒரு வருஷமோ. அதுவரைக்கும் அவரை நல்லா பார்த்துக்குங்க" அப்படீன்னு சொல்லிட்டு போய்விடுகிறோம்.
"புற்றுநோயைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாம இருக்குறது கூட தப்பில்லைங்க. ஆனா, அந்த புற்றுநோயைப் பற்றி நமக்கு இருக்குற அரைகுறை அறிவை அடிப்படையா வச்சிக்கிட்டு, புற்றுநோய் குறித்த தவறான கருத்துகளை சமூகத்துல பரப்புறது மிகப்பெரிய தப்புங்க! இதை நாம எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கனுமுங்க"
இப்படி குத்துமதிப்பா, யாரோ எங்கேயோ சொன்னது, சினிமாவுல பார்த்ததுலேர்ந்து தெரிஞ்ச அரைகுறை விவரங்களினடிப்படையில, தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தரோட வாழ்க்கையோட விளையாடிடுறாங்க நம்மில் பலர்! விளைவு, சம்பந்தப்பட்டவரின் புற்றுநோய் அவரின் உடல்நிலையை பாதிக்கிறதோ இல்லையோ, இம்மாதிரியான அவநம்பிக்கை, அரைகுறை அறிவின் வெளிப்பாடுகளாக வந்துவிழும் வார்த்தைகள், நோயாளியின் மனதை வெகுவாக பாதித்துவிடுகிறது.
இதனால், பல புற்றுநோயாளிகள் அவர்களின் புற்றுநோயின் நிலையை மருத்துவரை அணுகியெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மாறாக அவர்களே குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதாவது,
மருத்துவமனைக்கே செல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் புற்றுநோயாளிகள்!
"நாம இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோதான் உயிரோட இருப்போம்(?). அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போவோமே! எதுக்கு இந்த விஷயத்தை போய் வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லிக்கிட்டு, அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து, கடன் வாங்கியெல்லாம் செலவு செஞ்சுக்கிட்டு.....?! எப்படியிருந்தாலும் நம்ம புற்றுநோய் குணமாகப்போறதில்ல. ஏன்னா, எந்த புற்றுநோய்க்கும் (?) இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல(?). அப்புறம் ஏன் வீணா ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சுகிட்டு, வெட்டி செலவு செஞ்சுகிட்டு....."
இப்படித்தான் நம்மில் பலர், பல மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான தரமான சிகிச்சைகள் கிடைக்கும்போதும், தங்களைத் தாங்களே அறியாமையால் மாய்த்துக்கொள்கிறார்கள்! இது பேச்சுக்காக சொல்லும் கதையல்ல! அப்பட்டமான நிஜம்!!
"எனக்குத்தெரிந்த நண்பரொருவர், தனக்கு ஏற்பட்ட தொண்டைப்புற்றுநோயைப் பற்றி சுமார் ஒன்றரை வருட காலம் யாரிடமும் சொல்லாமல், எதேச்சையாக நண்பர்களுக்கு தெரிய வரும் வேளையில், புற்றுநோயின் மிக மிக முற்றிய நிலையில் அவர் இருக்க, அவரை வற்புறுத்தி உடனே  மருத்துவமனை அழைத்துச்சென்று பார்க்கும்பொழுது, அவருக்கு இன்னும் சில மாத காலமே வாழ்க்கை என்னும் துர்பாக்கிய நிலை தெரியவந்தது......"
ஆனால், தொண்டைப் புற்றுநோயின் யதார்த்தம் முற்றிலும் எதிர்மறையானது! அதாவது, தொண்டையில் பிரச்சினை என்று தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதித்து உண்மையை தெரிந்துகொண்டால், ஏற்பட்டிருப்பது புற்றுநோயென்றாலும், நோயின் ஆரம்ப நிலையிலும், சற்றே முற்றிய நிலையிலும் அதை முழுவதுமாக சரிசெய்து விட முடியும். அதற்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் 100% உத்திரவாதமளிக்கிறது!
இதற்கு என்னதான் தீர்வு???
எனக்குத் தெரிந்தவரை இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அதுதான் புற்றுநோயைப் பற்றிய சமுதாய விழிப்புணர்வு! புற்றுநோய் என்றால் என்ன என்னும் அடிப்படை கேள்வி தொடங்கி, புற்றுநோய்களை எதிர்கொண்டு எப்படி வெற்றிகரமாக மீண்டு வருவது என்பது குறித்த புரிதல் வரையிலான அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்வதுதான் புற்றுநோய் குறித்த சமுதாய விழிப்புணர்வு!
இத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் மற்றும் ஊடகத்துறையின் கடமை! ஆனால் யதார்த்தம் என்னவென்றால், புற்றுநோயை விட குறைவான எண்ணிக்கையில் உயிர்பலி கொண்டுவரும் எய்ட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு (அதான் உங்களுக்கு புள்ளிராஜாவுல ஆரம்பிச்சி தில்லுதுற வரைக்கும் நல்லா தெரியுமே!) புற்றுநோய்க்கு இல்லை என்பதுதான்!
இத்தகைய விழிப்புணர்வை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மருத்துவமனைகள் செய்துவருகின்றன என்றாலும் பலனொன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரமாக இருந்துவந்த புற்றுநோய் இறப்புகள் இன்று பல லட்சங்களாக உயர்ந்து நிற்பதே அதற்கு சான்று. காரணம், புற்றுநோய் குறித்த பெரும்பாலான நூல்கள், பிரசுரங்கள் என எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழில் புற்றுநோய் குறித்த விளக்கமான நூல்கள் மிக மிக குறைவு.
அதிலுள்ள வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்பிவிடும் முயற்சியாக எழுதப்பட்டதுதான் "ஏன் உருவாகிறது புற்றுநோய்" என்னும் தலைப்பிலான என்னுடைய புதிய நூல்! இதில் புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், புற்றுநோயினால் உண்டாகும் உபாதைகள், புற்றுநோய்களை கண்டறியும் முன்பரிசோதனைகள், புற்றுநோய்களுக்கான நவீன சிகிச்சைகள், புற்றுநோய்களை தவிர்க்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பல மர்மங்கள்  எனப் பல விவரங்களை, மிகவும் எளிமையாக எடுத்துச்சொல்ல முயன்றிருக்கிறேன்.......
"ஏன் உருவாகிறது புற்றுநோய்? எதிர்கொள்வது எப்படி?" நூலுக்கான எனது முன்னுறை.....
பிறப்பு, வளர்ச்சி, வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த குணாதீசியங்கள், திறன்கள், குறைபாடுகள் மற்றும் இறப்பு என எல்லாம் ஒன்றோடொன்று இரண்டறக்கலந்த மனிதனின் தினசரி வாழ்க்கையை, அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. மனிதனைத்தாக்கும் உயிர்கொல்லியான புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல!



ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அந்த நான்கில் மூன்று பேர் பெற்றோர், ஆசிரியரின் சொற்படி நல்வழிப்பாதையில். ஆனால் ஒரு பிள்ளை மட்டும் ஏனோ தவறான பாதையில் தறிகெட்டு போய்விடுகிறது! அதற்கு காரணம், பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கவனக்குறைவு, கூடா நட்பு, ஊழ்வினைப்பயன், முன்ஜென்ம பாவ புண்ணியம் அல்லது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத வேறு ஏதோ ஒரு காரணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடும்பத்து பிள்ளைகளில் தவறிப்போன ஒரு பிள்ளைபோல, ஒரு உயிரணு குடும்பத்தில் தவறிப்போய் தறிகெட்டு வளரும் ஒரு உயிரணுதான் இந்த புற்றுநோய் உயிரணு/புற்றணுவும்! ஒரு ஆரோக்கியமான உயிரணு ஏன், எப்படி புற்றணுவாகிறது? அதை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு தெளிவாக விடை சொல்ல முயற்சித்துள்ளேன்.
புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், பல நூல்கள் வாசித்த அனுபவம், ஆய்வனுபவம் மற்றும் ஆய்வறிக்கைகளின் முடிவுகளிலிருந்து, கவனமாக தொகுக்கப்பட்ட தகவல்கள் என ஒரு வருடக் கால உழைப்பில் உருவான கலவைதான் இந்த நூல்!
இந்நூல் எழுத வாய்ப்பளித்த பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. எனது முந்தைய நூலான "பாலியல்-இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?" எனும் தலைப்பில் வெளிவந்த நூலிற்கு வாசகர்கள் வழங்கிய வரவேற்பிற்கும், அதேபோல் இ ந் நூலினை வாசிக்கத் தொடங்கியிருக்கும் தங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
பத்மஹரி.